டெல்லி : மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நெல்லை, கோவை, ஈரோடு, கரூர் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
கோவையில் நேற்று (ஏப்.13) நடைபெற்ற பிரம்மாண்ட பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில், மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்ல உள்ளார். ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் தேதி கேரளாவிலும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ஆம் தேதி கர்நாடகாவிலும் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 28 மக்களவை தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. தென் மாநிலங்களில் நிலவும் பாஜக எதிர்ப்பு அலையை தன்வசப்படுத்தி அதிக அளவில் இடங்களை கைப்பற்ற இந்தியா கூட்டணி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக ராகுல் காந்தி தென் மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019ஆம் அண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 19 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.