சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான எண்ணிக்கையை அதிகரிக்கவும், 6 மாவட்டங்களில் கூடுதலாக அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கும் மத்திய அரசிடம் பேசி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
தமது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சென்னை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நந்தனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1902ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசின் சார்பில் அவ்வப்போது செய்து வருகிறோம்.
கல்லூரியில் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு அரங்கம் அமைக்க எனது தொகுதி நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது. இப்போது 4.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரத்து 760 சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் இறுதியில் இந்த பணிகள் நிறைவு பெற உள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு...போலீசுக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு தடை!
தமிழ்நாட்டில் 2553 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கு 24 ஆயிரம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அவர்களின் விபரங்கள் பொது சுகாதாரத்துறை, ஊரக மருத்துவப் பணிகள் சேவை கழகம் ஆகியவற்றின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தகுதி அடிப்படையில் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொரோனா காலத்தில் பணியாற்றி உள்ளார்களா? என்பதை உறுதி செய்த பிறகு அவர்களுக்கான போனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டு முடிவு வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி இருக்கிறது என்ற தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். இந்த விஷயத்தில் தமிழகம் பின்னடைவை சந்திப்பதற்கு மத்திய பாஜக அரசுதான் காரணம். தமிழகத்தில் மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்காசி, பெரம்பலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் எண்ணிக்கையில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் பேசி தமிழ்நாட்டின் கோரிக்கையை நிறைவேற்றும்படி கோர வேண்டும். மேலும் தமிழகத்தில் செவிலியர் கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசின் பங்கும் தேவை என்பதால் இந்த விவகாரம் குறித்தும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளாம். ஏற்கனவே அவர் ஒதுக்கிய நேரத்தில் செல்ல முடியவில்லை. இப்போது டெல்லி சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னர் நேரில் சந்திக்க தேதி கொடுக்கப்படும் என மத்திய அரசின் சார்பில் தெரிவித்துள்ளனர்,"என தெரிவித்தார்.