ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவரை போலீசார் பிடிக்க முயன்ற போது வழுக்கி விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சிப்காட் காவல் நிலையத்தின் மீது இருநபர்கள் திடீரென பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். மேலும் சிப்காட் வ.உ.சி.நகரில் உள்ள அரிசிகடை ஒன்றின் வாசலிலும் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால், கடையின் முன்பகுதி கருகி சேதமடைந்தது.
தமிழரசன், கூட்டாளிகள்:அடுத்தடுத்து இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களை விசாரிக்கை எஸ்.பி.தலைமையில், 2 ஏ.டி.எஸ்.பி, 4 டி.எஸ்.பி ஆகியோர் அடங்கிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசாரின் விசாரணையில் சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான தமிழரசன் (48) மற்றும் அவரது கூட்டாளிகளான ஸ்ரீதரன் (28), டோனி மெக்கலின் (23) ஆகியோர் திட்டமிட்டு காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.
ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான தடிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த தமிழரசனின் மகன் ஹரி (18)யை நேற்று முன்தினம் ராணிப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். வாலாஜா டோல்கேட் அருகே வாணி சத்திரம் பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற போது, ஹரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு போலீசாரை தாக்க முயற்சித்ததாகவும், இன்ஸ்பெக்டர் சசிகுமார், ஹரியை இடது காலில் முட்டிக்கு கீழே சுட்டு பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த ஹரி, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பி ஓட முயன்ற தமிழரசன்: இந்த நிலையில், பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் தொடர்பு உடைய சிப்காட் வ.உ.சி.நகர் பகுதியை சேர்ந்த பரத் (18), விஷால் (20) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி தமிழரசனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை டி.சி.சி. தொழிற்சாலை அருகே தமிழரசன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, அவரை பிடிக்க சென்ற தனிப்படை போலீசார் விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற தமிழரசன் கீழே தவறி விழுந்தார். இதனால், அவரது வலது கால், மற்றும் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தமிழரசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.