புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் இன்று நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதில் பெரும்பாலானவை தலைநகரை பாஜக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன.
எழுபது இடங்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி, மொத்தம் 57.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தலைநகரை பாஜக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக 39-44 இடங்களை கைப்பற்றும் என்று சாணக்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு 25-28 இடங்களும், காங்கிரஸுக்கு 2-3 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பி-மார்க் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் பாஜக 39-49 இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்கும் என்றும், ஆம் ஆத்மிக்கு 21-31 தொகுதிகளும், காங்கிரஸ் 0-1 இடங்களும் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மிக்கு 32- 37 இடங்களும், பாஜகவுக்கு 35-40 இடங்களும் கிடைக்கும் என்று மேட்ரிஸ் நிறுவனம் கணித்துள்ளது. காங்கிரஸ் 0-1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் இந்த கணிப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், பாஜக 39 -45 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22-31 இடங்களிலும் வெல்லும் என்று ஜேவிசி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 0-2 தொகுதிகள் மட்டும்தான் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.