திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (பிப்.5) துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் சேவல், மயில் பொறிக்கப்பட்ட கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் நாளை காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க வழிபாடு - செல்வப்பெருந்தகை பேட்டி!
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி 10ம் தேதியும், தைப்பூசத் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி 11 ஆம் தேதி மாலையும் நடைபெற உள்ளது.
பத்து நாட்கள் நடைபெறக்கூடிய தைப்பூசத் திருவிழாவிற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.