டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (ஜன.27) முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த முதல் மாநிலமாக உத்தரகாண்ட் திகழ்கிறது.
சட்ட நிறைவேற்றம்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக பதவியேற்ற புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட வரைவை உருவாக்கி அதனை ஆராய 27 மே 2022 அன்று நிபுணர் குழு அமைத்தார். அதன் பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அந்த குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. தொடர்ந்து பொது சிவில் சட்டத்துக்கான மசோதா கடந்தாண்டு மார்ச் 8 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இருவரின் ஒப்புதலுக்கு பிறகு பொது சிவில் சட்டம் கடந்தாண்டு மார்ச் மாதம் மார்ச் 12 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த சட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. பொது சிவில் சட்டத்துக்கான இணையதளம் இன்று தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து குடியரசு தின விழாவில் பேசிய அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, '' சமூகத்தில் சீரான தன்மையை கொண்டு வரவும், அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள், பொறுப்புகளை உறுதி செய்யவும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, பாலினம், ஜாதி அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படும். பொது சிவில் சட்டத்துக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது. சட்டம் செயல்பட தயாராக உள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: ராமோஜி திரைப்பட நகரில் களைகட்டிய குடியரசு தின கொண்டாட்டம்..
உத்தரகாண்டில் பழங்குடியினர் மக்களை தவிர்த்து பொது சிவில் சட்டம் அனைத்து மக்களுக்கும் பொருந்தும். மேலும், மற்ற மாநிலங்களில் உள்ள உத்தரகாண்ட் மக்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.
நோக்கம்:
திருமணம், விவாகரத்து, வாரிசு தொடர்பான பொதுவான விதிமுறைகளை இந்த சட்டம் உறுதி செய்யும். இச்சட்டத்தின்படி, திருமணம் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். திருமணத்திற்கான ஆணின் வயது 21, பெண்ணிற்கு 18 ஆகவும் இருக்க வேண்டும். திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வோரும் முறையாக பதிவு செய்தல் வேண்டும். திருமணத்தில் அனைத்து மத, சாதியினருக்கும் ஒரே விதிமுறைதான் என்பதை பொது சிவில் சட்டம் உறுதி செய்கிறது. மேலும் ஆண், பெண் இரு குழந்தைகளுக்கும் சொத்தில் சம உரிமை இருக்கிறது என்றும் இந்த பொது சிவில் சட்டம் உறுதி செய்கிறது.