டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து அவரது தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சுவாதி மலிவால் செல்போன் மூலம் டெல்லி காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், முதலமைச்சர் இல்லத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் டெல்லி போலீசார், ஆம் ஆத்மி கட்சித் தரப்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. மேலும், இது தொடர்பாக சுவாதி மலிவால் முறையான புகார் அளிக்கப்படவில்லை என்றும் போலிசாரும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து வடக்கு டெல்லி துணை காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், முதலமைச்சர் இல்லத்தில் இருந்து காலை 9.34 மணி அளவில் இரண்டு செல்போன் அழைப்புகள் வந்ததாகவும், அதில் தான் முதலமைச்சரின் தனிப்பட்ட உதவியாளரால் தாக்கப்பட்டது குறித்து சுவாதி மலிவால் புகார் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சுவாதி மலிவால் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் புகார் அளிப்பதாக கூறிவிட்டு மீண்டும் சென்றதாகவும் அவர் கூறினார். மேலும், சுவாதி மலிவால் புகார் குறித்து டெல்லி முதலமைச்சரின் இல்லத்திற்கு போலீசார் சென்ற போது அவர் அங்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கில் இடைக்கால பிணையில் வெளிவந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சுவாதி மலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் பன்சுரி சுராஜ், சொந்த கட்சி எம்பி தன் முன் தாக்கப்படுவதை தடுக்க முடியாத அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யவார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மல்வியா தனது எக்ஸ் பக்கத்தில், "ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் முன்னாள் டெல்லி மகளிர் ஆணைய தலைவரான சுவாதி மாலிவால், டெல்லி முதலமைச்சரின் தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டுகிறார். டெல்லி முதலமைச்சர் மாளிகையில் இருந்து போலீசாருக்கு செல்போன் அழைப்புகள் சென்றுள்ளன.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது விவகாரத்தில் சுவாதி மலிவால் மவுனம் காத்து வந்தார். அப்போது அவர் இந்தியாவில் கூட இல்லை. நீண்ட நாட்களுக்கு அவர் இந்தியாவுக்கு திரும்பவும் இல்லை. இதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று அமித் மல்வியா பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:4வது கட்ட மக்களவை தேர்தல் 2024: 1 மணி நிலவரப்படி 40.32% வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 2024