புவனேஸ்வர்:ஒடிசா மாநில காடுகளில் கடந்த நவம்பர் 14 முதல் 16 வரை மூன்று நாட்களில் எடுக்கப்பட்ட குளிர்கால கணக்கெடுப்பில் மொத்தம் 2,103 யானைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனத் துறையினர் இன்று வெளியிட்ட கணக்கெடுப்பு அறிக்கையின்படி, மொத்தம் 48 வனக் கோட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், 38 இடங்களில் யானைகள் காணப்பட்டன. யானைகளில் குட்டி யானைகள், நடுத்தர வயது கொண்ட யானைகள், வயதான யானைகள் மற்றும் அவற்றில் ஆண், பெண் என வகைப்படுத்தப்பட்டு மொத்தம் 2,103 யானைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
குளிர்கால கணக்கெடுப்பின் போது, அதிக எண்ணிக்கையிலான காட்டு யானைகள் தேன்கனல் (291), கியோஞ்சர் (160), அத்கர் (124), தியோகார் (123) மற்றும் அங்குல் (117) ஆகிய இடங்களில் காணப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட கோடைக்கால கணக்கெடுப்பின்போது 2,098 யானைகள் கணக்கிடப்பட்டிருந்தன. அதேபோல, ரூர்கேலா, கியோஞ்சர், சம்பல்பூர், அத்தமாலிக், கும்சூர் வடக்கு, கலஹண்டி வடக்கு, கலஹண்டி தெற்கு, போலங்கிர் மற்றும் ரைராகோல் போன்ற பிரிவுகளிலும் யானைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:யார் அடுத்த முதல்வர்..? வெளியான முக்கிய தகவல்.. டெல்லிக்கு விரையும் இரு தலைகள்..!
அதே சமயம், சிமிலிபால் வடக்கு வனவிலங்கு சரணாலயம், சட்கோசியா வனவிலங்கு சரணாலயம், பாம்ரா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ராயகடா போன்ற பகுதிகளில் குறைவான யானைகள் பதிவாகியுள்ளது.
கோடைகால மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது குளிர்கால மாதங்களில் ரூர்கேலா மற்றும் பவானிபட்னா வட்டங்களில் யானைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாகவும் கணக்கெடுப்பு அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த மாற்றம் குளிர்கால மாதங்களில் யானைகளின் பருவகால இடைவெளி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நடமாட்டம் காரணமாக இருக்கலாம் என்று வனத்துறை தெரிவிக்கிறது.
மேலும், தற்போது நடத்தப்பட்டுள்ள குளிர்கால கணக்கெடுப்பில், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவிற்கு அதிக அளவில் யானைகள் மாநிலங்களுக்கு இடையே நகர்வதைக் வனத்துறை கண்டறிந்துள்ளது. சில யானைகள் ஆந்திரா மற்றும் சத்தீஸ்கரில் இருந்து நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை அறிக்கையின்படி, கோடை மற்றும் குளிர்கால கணக்கெடுப்பு காலங்களுக்கு இடையில் 48 யானைகள் இறந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்