மணல் அள்ளுவதற்கு விஏஓ லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோ - தற்காலிக பணியிடை நீக்கம்
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: பெரிய பேராளியைச் சேர்ந்தவர், ரவி. இவர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் கணவர் ஆவார். இவர் பெரிய பேராளி ஊராட்சியில் சட்ட விரோதமாக மண் அள்ளுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் மதன் குமார் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கருப்பையா ஆகிய இருவரும் பேரம்பேசி 1000 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும் லஞ்சமாக வாங்கிய 1000 ரூபாய் பணத்தை தன்னுடைய உதவியாளரிடம் கொடுக்கச் சொல்வதும், மேலும் 'நீங்கள் மண் அள்ளுங்கள், அள்ளாமல் செல்லுங்கள்; அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை' எனவும், அதற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர், 'நாங்கள் இதற்கு முன் மண் அள்ளினாலும் மண் அள்ளா விட்டாலும் உடனடியாக லஞ்ச பணத்தை உடனுக்குடன் கொடுக்கவில்லையா' என அவர் பேசுவது போன்றும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் மதன் குமார் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கருப்பையா சட்ட விரோதமாக மணல் அள்ளுவதற்கு லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, பெரிய பேராளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மதன் குமார் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் கருப்பையா ஆகிய இருவரையும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.