நீலகிரி படுகர் இன மக்களின் சக்கலாத்தி பண்டிகை; முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபாடு! - SAKKALATHI FESTIVAL
🎬 Watch Now: Feature Video
Published : 3 hours ago
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திலுள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாய மக்கள் தங்களது முன்னோர்களை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் 'சக்கலாத்தி' எனும் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம்.
இந்த பண்டிகையையொட்டி படுகர் இன மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அருகம்புல், கொதுங்கு, பிலிகிச்சை, ஹூம்ரி உள்ளிட்ட மூலிகைச் செடிகளை ஒன்றாகக் கட்டி தங்கள் வீடுகளின் கூரை மற்றும் மாட்டுத்தொழுவத்தின் கூரைகளில் காப்புக் கட்டினர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை தங்களது வீட்டில் உள்ள அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலைப் பயன்படுத்தி வீட்டின் முன்புற வாசல்களில் நட்சத்திரம், சூரியன், சந்திரன் மற்றும் விவசாய கருவிகளின் படங்களை கோலமாக வரைந்தனர். பின்னர் தங்களது முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுகள் மற்றும் பலகாரங்களை படையல் இடுவதற்காக சமைத்தனர்.
பின்னர் அந்தந்த கிராமங்களில் உள்ள தொட்ட மனை என்றழைக்கப்படும் வீட்டைச் சேர்ந்த ஒருவர், ஒவ்வொரு வீடாகச் சென்று முன்னோர்களுக்காக அவர்கள் தயாரித்த உணவை சேகரித்தனர். இதையடுத்து அந்த உணவுகளை, ஊருக்குப் பொதுவான ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை நேரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தலா ஒரு நபர் என ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது முன்னோர்களை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும், தாங்கள் தயாரித்த பலகாரங்களை அண்டை வீட்டாருக்கு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.