ஃபெஞ்சல் புயல் கற்றுத் தந்த பாடம் என்ன?- எதிர்கால வானிலை இப்படித்தான் இருக்குமா? - LESSONS LEARNT FROM FENGAL CYCLONE
🎬 Watch Now: Feature Video
Published : Dec 27, 2024, 5:41 PM IST
|Updated : Dec 27, 2024, 5:54 PM IST
சென்னை: ஃபெஞ்சல் புயல் தமிழ்நாடு கடற்கரையைத் தாக்கி இன்றோடு ஒரு மாதம் கடந்து விட்டது. ஆனாலும் இன்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டு போராடுவது நடந்து கொண்டு தான் இருக்கிறது. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து. தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி அன்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஃபெஞ்சல் புயல் என்று பெயரிட்டது. இப்புயலின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. இந்த புயலினால் அதிகமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்தன. ஃபெஞ்சல் புயலின் போது பெய்த அதீத கனமழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பு காரணமாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை மற்றும் அதன் கிளையாறுகளின் கரையோரங்களில் இருக்கும் கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நேரில் ஆய்வு செய்த ஈடிவி பாரத் நிருபர் குழு அப்பகுதி மக்கள் படும் துயரங்களை பதிவு செய்துள்ளது. அத்தோடு, பருவநிலை மாற்றம் காரணமாக இது போன்ற அதீத வானிலை நிகழ்வுகள் இனி ஆண்டுதோறும் நிகழலாம் என எச்சரிக்கப்படுவது பற்றிய கருத்துக்களையும் ஈடிவி பாரத் பதிவு செய்கிறது.