தென்காசியில் கொட்டித் தீர்த்த கனமழை! குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை! - வெள்ளப்பெருக்கு
🎬 Watch Now: Feature Video
Published : Oct 30, 2023, 9:13 AM IST
தென்காசி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்திலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மழை இல்லாத நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2, 3 நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக குற்றால அருவியில் நீர்வரத்தானது அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதி மட்டுமல்லாமல் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேலையில் அதிகப்படியான கனமழை பெய்த காரணத்தாலும் குற்றாலம் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குற்றால மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் குற்றாலத்தில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் அருவியை பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.