ஈரோடு நேதாஜி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு; கிலோ தக்காளி ரூ.70-க்கு விற்பனை!
ஈரோடு: ஈரோடு நேதாஜி காய்கறி சந்தைக்குத் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக அண்டை மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாகவும் அதே போலத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஈரோடு காய்கறி சந்தைக்குக் காய்கறிகள் வரத்து குறையத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாகக் கர்நாடக மாநிலம் கோலாரிலிருந்து தக்காளி வரத்து அதிகம் காரணமாகவும் மொத்த விற்பனையில் 25 கிலோ எடை கொண்ட பெட்டியானது ரூபாய் 1750க்கு விற்கப்பட்டன. மொத்த விற்பனையில் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 70க்கு விற்கப்பட்டது. ஆனாலும் விற்பனையில் மந்தம் ஏற்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னதாக கடந்த சில நாட்களாகவே வெளி மாநிலங்களில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகத் தக்காளி விலை ரூபாய் 100 ஐ தாண்டியது. இதனை கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழ்நாடு அரசு ஆலோசித்து நியாயவிலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூபாய் 60க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Tenkasi: குற்றாலம் ஹோட்டலில் கெட்டுப்போன 50 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்!