அப்துல்லாபுரம் பகுதியில் விரைவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்-அமைச்சர் T.R.B.ராஜா - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அப்துல்லாபுரம் பகுதியில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. அதனை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை T.R.B.ராஜா இன்று (ஆகஸ்ட் 1ஆம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார். அதன் பின்னர் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் தொழிற்பேட்டை அமையுள்ள பகுதியினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் T.R.B.ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். வனப்பகுதிக்கு அருகில் இவர் ஆய்வு செய்தபோது அங்கு மாவட்ட வன அலுவலர் ஏன் வரவில்லை? என அதிகாரிகளிடம் கேட்டார். அவர் வரவில்லை என கூறியதால் ஆய்வு செய்ய வருகிறோம் என்று தெரிந்தும் வரவில்லையா? என கடிந்து கொண்டார் அடுத்த முறை அவர் வரவேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, "வேலூர் அருகே அப்துல்லாபுரம் பகுதியில் அமைய உள்ள தொழில்நுட்ப பூங்கா பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், காட்பாடி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் துவங்கி உள்ளது. மிகப்பெரிய தொழிற் பேட்டை காட்பாடியில் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்பேட்டை சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு அதற்கான வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் விரைவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இந்தியாவில் நடைபெறாத வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும். இந்த மாநாடு இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்க இருப்பதால் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஒரு உந்துதலை ஏற்படுத்தும்” எனக் கூறினார்.