புளியரை சோதனைச் சாவடியில் கையூட்டு - வெளியான வீடியோவால் காவலர் சஸ்பெண்ட் - Tenkasi news today
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டத்தின் தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான புளியரை சோதனைச் சாவடி வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் தமிழ்நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு சென்று வருகிறது. இவ்வாறு செல்லும் லாரிகளை புளியரை காவல் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து வைக்கோல் கட்டுகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, புளியரை சோதனைச் சாவடியில் அந்த லாரியை மறித்த காவலர்கள், லாரியில் அதிக பாரம் இருப்பதாகக் கூறி நிறுத்தி வைத்து உள்ளனர்.
தொடர்ந்து, லாரியை அனுமதிக்க வேண்டுமென்றால் தங்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று ஓட்டுநரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த லாரி ஓட்டுநர் புளியரை காவல் நிலைய சோதனைச் சாவடியில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளரிடம் லஞ்சம் கொடுத்துள்ளார். இதனை அருகே இருந்த நபர் ஒருவர் வீடியோவாகப் பதிவிட்ட நிலையில், அந்த வீடியோ காவல் துறை உயர் அதிகாரிகள் வரை சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோவை வைத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், லாரி ஓட்டுநர்களிடம் உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் என்பவரை பணியிடை நீக்கம் செய்த காவல் கண்காணிப்பாளர், அவருக்கு உதவியாக இருந்த மற்ற காவலர்களான மகாராஜன் மற்றும் காளிராஜ் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.