திருச்சி: தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரங்களில் ஒன்று திருச்சி. தமிழ்நாட்டின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன. நகரின் மையப்பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிலையங்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும். இதனால் மாநகர் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. திருச்சி மாநகர் பகுதியில் அதிகரிக்கும் மக்கள்தொகை பெருக்கம், அதிக அளவில் வாகன பயன்பாடுகள் காரணமாகவும், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்க்கு முடிவு கட்டும் வகையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே பஞ்சப்பூரில் ரூ.350 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து முனையமானது நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தும் அளவிற்கு மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதில் பொது மக்களுக்கு தேவையான காத்திருப்பு அறை, குடிநீர் வசதி, கழிவறை வசதி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள், மாற்றுதிறனாளிகளுக்கான பிரத்யேக தடங்கள், ஓய்வறைகள், குளிரூட்டபட்ட தங்கும் அறைகள், ஆம்னி பேருந்துக்கான தனி வழித்தடம் என பிரமாண்டமாக தயாராகி வருகிறது. மேலும் இந்த பேருந்து முனையத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சியர் தலைவர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவபாதம், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.