திருநெல்வேலி: பாளையங்கோட்டை மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் சுகாதாரம் இன்றி செயல்பட்டு வந்த நிலையில் அதனை உடனடியாக மறு சீரமைக்க மேயர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஊழியர்கள் உணவகத்தை சுத்தம் செய்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு பொதுமக்கள் மத்தியில் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது அந்தந்த மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நெல்லை மாநகராட்சி சார்பில் 10 இடங்களில் மாநகரப் பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. நெல்லை மாநகராட்சியின் சிறந்த அம்மா உணவகமாக பாளையங்கோட்டை மார்க்கெட் அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது அந்த அம்மா உணவகம் மிகவும் சுகாதாரம் இன்றி கவலைக்கிடமாக காட்சியளித்து வருகிறது.
அம்மா உணவகத்தின் முன்புறம் அதிகளவிலான லோடு ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் உணவகத்திற்கு வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் அந்த உணவகத்தின் அருகே தற்காலிக பொதுக் கழிப்பிடம் செயல்பட்டு வரும் நிலையில் உணவகத்தை சுற்றி சிறுநீர் கழிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபட்டு வருவதால் உணவகத்திற்குள் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதன் காரணமாக அம்மா உணவகத்திற்குள் நின்று உணவு உண்ண முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். எனவே அம்மா உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளடைவில் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக அங்கு விற்பனையும் சரிந்தது. நாளொன்றுக்கு ரூ.3200 என டார்கெட் வைத்து உணவு பொருட்களை விற்பனை செய்து அதற்கான தொகையை மாநகராட்சி அலுவலகத்தில் கட்ட வேண்டும் என அதிகாரிகள் உணவக ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: அறிக்கையை காப்பி, பேஸ்ட் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி; முதலமைச்சர் விமர்சனம்!
அதிகாரிகளின் நெருக்கடியை பொறுக்க முடியாமல் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் "மதிய உணவு சமைக்கப் போவதில்லை. அதிகாரிகள் தங்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் உணவகத்தின் முன்பு இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றி துர்நாற்றம் வீசுவதை தடுக்க வேண்டும்," என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பாளையங்கோட்டை மார்க்கெட் அம்மா உணவகத்திற்கு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகத்தில் உள்ள காய்கறிகள் இருப்பு, பொருட்கள், உணவு கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார் உணவகத்திற்கு மாநகராட்சி உயர் அதிகாரிகளையும் உடனடியாக வரவழைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் துர்நாற்றம் வீசும் பகுதிகளை சுத்தம் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் அம்மா உணவகத்தைச் சுற்றிலும் கிருமினாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிவேக பம்பு செட்டுகள் வரவழைக்கப்பட்டு கிரிமினியாசினி கலந்த தண்ணீர் கொண்டு அம்மா உணவகத்தின் சுவர்கள் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டன.
அம்மா உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள் காவல்துறை மூலம் அகற்றப்பட்டன. மேலும், அம்மா உணவகத்திற்கு தேவைப்படும் பலசரக்கு மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு வந்து உணவகத்தில் சேர்த்தனர். வேலைநிறுத்த போராட்டம் என அறிவித்த ஊழியர்களிடம் கனிவாக பேசி அம்மா உணவக பகுதியில் இருந்த பிரச்சனையையும் உடனடியாக சரி செய்து கொடுத்து ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் அம்மா உணவகத்தை மீட்ட மாநகராட்சி மேயருக்கு பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.