இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ அப்துல் நசீர் விலக்கிக் கொண்டுள்ளார். இது குறித்து மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மணிப்பூர் மாநில ஐக்கிய ஜனதா தளம் வெளியிட்ட அறிக்கையில், அப்துல் நசீர் மணிப்பூர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து அவர் சட்டப்பேரவையில் எதிர்கட்சி வரிசையில் அமர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு எம்எல்ஏ ஆதரவை விலக்கிக் கொண்டதன் மூலம் பைரன் சிங் தலைமையிலான அரசுக்கு ஏதும் ஆபத்து இல்லை.
60 பேர் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் பைரன் சிங் அரசுக்கு 37 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. நாகா மக்கள் முன்னணியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களின் ஆதரவும் அவருக்கு உள்ளது. இந்த நிலையில் மணிப்பூர் ஆளுநர் பல்லாவுக்கு மாநில ஐக்கிய ஜனதா தளம் தலைவர் கேஷ் பிரேன் சிங் எழுதிய கடிதத்தில்," கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மணிப்பூர் சடடப்பேரவைத் தேர்தல் நடந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் 6 பேர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகினர்.
சில மாதங்கள் கழித்து ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஐந்து பேர் பாஜகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு எதிரான கட்சியின் முறையீடு இந்தியாவின் பத்தாவது அட்டவணையின் கீழ் மாநில சபாநாயகர் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. பாஜக தலைமையிலான மணிப்பூர் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஐக்கிய ஜனதா தளம் விலக்கிக் கொள்கிறது. எனவே, கடந்த முறை நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏ அப்துல் நசீருக்கு எதிர்கட்சி வரிசையில் சபாநாயகர் இருக்கையை ஒதுக்கியிருந்தார்," எனக் கூறியுள்ளார்.