சென்னை: அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நேரத்தில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜி மற்றும் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர் சுதாகர் ஆகியோருக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை (ஜாமீன்) வழங்கியுள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதீஷ் என்ற வாலிபரும், 14 வயது சிறுவனும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி கைது செய்யப்பட்டார்.
அதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக செயல்பட்டதாக, முன்னாள் அ.தி.மு.க., பிரமுகர் சுதாகரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் பிணை கோரி சென்னையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, காவல் ஆய்வாளர் ராஜி, சுதாகர் ஆகியோருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சதீஷ் என்ற இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த நேரததில் காவல்துறை ஆய்வாளர் ராஜி தங்களை தாக்கியதாகவும், மற்றொரு சிறுவனின் பெயரை நீக்கக் கூறியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டனர்.
இதையும் படிங்க |
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அதை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஆனால் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்த தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக, சி.பி.ஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு விசாரணைக் குழு
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள 7 ஐ.பி.எஸ் அலுவலர்கள் அடங்கிய எழுவர் குழுவை அமைத்து, பட்டியலை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வருகிறது.
இவர்கள் விசாரணையில் தான் காவல் ஆய்வாளர் ராஜி மற்றும் முன்னாள் அதிமுக 103-ஆவது வட்டச் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் ராஜி புகார்தாரரை தாக்கியதும், சரிவர விசாரணை நடத்தவில்லை என்பதாலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சதீஷுக்கு அடைக்கலம் கொடுத்ததால் சுதாகர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.