ஜமாத் தலைவருக்கு பார்சலில் வந்த மண்டை ஓடு - போலீசார் விசாரணை! - ஜமாத் தலைவருக்கு பார்சலில் வந்த மண்டை ஓடு
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் : திருவையாறு முகமது பந்தர் பள்ளிவாசல் தலைவர் முகமது காசிம் என்பவருக்கு கொரியர் பார்சலில் மண்டை ஓடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே முகமது பந்தர் ரஹீம் நகரைச் சேர்ந்தவர், முகமது காசிம். முகமது பந்தர் பள்ளிவாசல் தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 3ஆம் தேதி தனியார் கொரியர் நிறுவனம் மூலம் பார்சல் வந்து உள்ளது. அன்று மாலை சுமார் 7 மணி அளவில் கொரியர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் பார்சல் கொண்டு வந்து அவரிடம் கொடுத்துள்ளனர்.
முதல் நாள் பார்சலை பிரித்து பார்க்காத நிலையில் இன்று (மே. 4) முகமது காசிம் பார்சலைப் பிரித்து பார்த்து உள்ளார். பார்சலைப் பிரித்து பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சியாக மண்டை ஓடு இருந்து உள்ளது.
இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு முகமது காசிம் தகவல் கொடுத்து உள்ளார். தகவலின் பேரில் திருவையாறு டிஎஸ்பி ராஜ்மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பார்சலில் வந்த மண்டை ஓட்டை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்சலில் அனுப்புநர் முகவரியில் 'நவ்மன்பாய் கான்' என பாதி ஆங்கிலம், பாதி தமிழ் என கலந்து எழுதப்பட்டு உள்ளது. மேலும் பார்சலில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜமாத் தலைவருக்கு பார்சலில் மண்டை ஓடு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.