திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. முதல் நாளான இன்று நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் ஆகியோர் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தை திருநாளாம் முதல் நாள் பொங்கல் விழாவில் அனைத்து மதத்தை சேர்ந்த பெண்களும், காவல்துறை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர்.
பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கும்மியாட்ட குழுவினருடன் சேர்ந்து கும்மி பாட்டுக்கு கும்மி அடித்து ஆடி மகிழ்ந்தார். சமத்துவ பொங்கலின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம், பறை இசை நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்த நிகழ்வினை காண திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து விழாவை கண்டு களித்தனர்.
மதிமுக சமத்துவ பொங்கல்
இதே போல திருப்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5,000 பெண்கள் கலந்து கொண்ட 27 - ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: 'அமைதியோ அமைதி'.. மவுண்ட் ரோடா இது..! பொங்கல் விடுமுறையால் வெறிச்சோடிய சென்னை..!
சூரிய பொங்கல்
அந்த வகையில், இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 27 வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தை சார்ந்த 5,000 பெண்கள் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்தனர். இந்நிகழ்வை மதிமுகவின் மாநில தொண்டர் அணியின் அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சென்னை பெரு நகர மாமன்ற மதிமுக உறுப்பினர் ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் சீர் வரிசை கொடுத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பெண்கள் கும்மிப்பாட்டு பாடி பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஊர் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வை காண திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடனமாடி மகிழ்ந்த திருநங்கைகள்
இதே போல, திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தமிழர் பேரவை சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில், திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நடனமாடி அசத்தினார். இதேபோல திருநங்கைகளும் விழாவில் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனர்.