சாம்சங் நிறுவனம், 'கேலக்சி அன்பேக்டு இவென்ட் 2025' என்ற பெயரில் (Galaxy Unpacked Event 2025) தனது புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுகளை ஜனவரி 22 அன்று அறிமுகம் செய்கிறது. இந்த நிகழ்வு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள 'சான் ஜோஸ்' எனும் இடத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த சூழலில், இவான் பிளாஸ் (Evan Blass) எனும் தொழில்நுட்ப தகவல் வல்லுநர், கேலக்சி எஸ்25 தொடர்பானத் தகவல்களை சப்-ஸ்டாக் எனும் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக சாம்சங் கேலக்சி எஸ்25 (Samsung Galaxy S25) ஸ்மார்ட்போன் சீரிஸில் மொத்தம் மூன்று போன்கள் இடம்பெறுவது வழக்கம். அடிப்படை மாடலான கேலக்சி எஸ்25, நடுத்தர வகையான கேலக்சி எஸ்25+, மேம்பட்ட பிரீமியம் மாடலான கேலக்சி எஸ்25 அல்ட்ரா. ஆனால், இம்முறை ஐபோன் 17 ஏர் மாடலுக்குப் போட்டியாக, சாம்சங் கேலக்சி எஸ்25 சிலிம் மாடல் வெளியாகலாம் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.
கசிந்தது என்ன?
கடந்தாண்டு வெளியான கேல்க்சி எஸ்24 மாடல் போலவே இம்முறையும் புதிய எஸ்25 மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் கேமரா பஞ்ச் ஹோல் இணைக்கப்பட்டுள்ளது. முக்கியமானது என்னவென்றால், அடிப்படை எஸ்25, எஸ்25+ ஆகிய மாடல்களில் மட்டுமே வளைந்த ஃபிரேம்கள் கொடுக்கப்படும். அல்ட்ரா மாடலின் முனைகளை சாம்சங் எப்போதும் நேராகத் தான் வடிவமைக்கும். இம்முறை சற்றும் வித்தியாசமாக அடிப்படை மாடலில் வருவது போன்ற வளைந்த முனைகளுடன் எஸ்25 அல்ட்ரா வெளியாகும் என கிடைத்த புகைப்படங்கள் உறுதி செய்திருக்கின்றன.
சாம்சங் கேலக்சி எஸ்25 சீரிஸின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
வெளியாகத் தயாராக இருக்கும் சாம்சங் கேலக்சி எஸ்25 ஸ்மார்ட்போன்களை, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் இயக்கும் என்ற தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், இ-சிம், வை-ஃபை 7, ப்ளூடூத் 5.3, ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் போன்றவற்றின் ஆதரவு கிடைக்கும்.
- கேலக்சி எஸ் 25: இதில் 6.2-இன்ச் டைனமிக் அமோலெட் 2X டிஸ்ப்ளே, 4,000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 25W சார்ஜிங் ஆதரவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கேலக்சி எஸ் 25+: இதில் 6.67-இன்ச் இன்ச் டைனமிக் அமோலெட் 2X டிஸ்ப்ளே, 4,900mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும் எனத் தகவல்கள் கசிந்துள்ளன.
- கேலக்சி எஸ் 25 அல்ட்ரா: இதில் 6.9 இன்ச் டைனமிக் அமோலெட் 2X டிஸ்ப்ளே, 5,000mAh பேட்டரி, 200 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒன்பிளஸ் 13, 13ஆர் அறிமுகம்: இந்த மொபைல் கொஞ்சம் வேற மாதிரி!
விலை என்னவாக இருக்கும்?
சாம்சங் கேலக்சி எஸ்25, 256ஜிபி ஸ்டோரேஜ் வகை சுமார் ரூ. 81,800 VND 23,990,000 விலையிலும், 512ஜிபி ஸ்டோரேஜ் வகை சுமார் ரூ. 93,900 (VND 27,490,000) என்ற விலையிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், கேலக்சி எஸ்25+ மாடல் போனின் 256ஜிபி ஸ்டோரேஜ் வகை சுமார் ரூ.95,000 (VND / வியட்நாம் பணம் 27,990,000) விலையிலும், 512ஜிபி பதிப்பு சுமார் ரூ. 1,07,400 (VND 31,490,000) விலையிலும் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்பட்ட கேலக்சி எஸ்25 அல்ட்ரா மாடலின் 256ஜிபி விலை சுமார் ரூ. 1,19,300 (VND 34,990,000) ஆக இருக்கும் எனவும், 512ஜிபி வகையின் விலை சுமார் ரூ. 1,31,300 ஆகவும், 1டிபி ஸ்டோரேஜ் வகையின் விலை சுமார் ரூ. 1,56,300 ஆகவும் இருக்கலாம் என கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.