சென்னை: சென்னையில் மூன்று சிறுமிகளிடம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அத்துமீறிய சம்பவத்தில் சிறுவர்கள் உட்பட ஆறு பேர் மீது செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் 33 வயது பெண். இவர் நேற்று முன் தினம் இரவு திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ''பெரம்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் தனது 12 வயது மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து தோழி வீட்டுக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்ற எனது மகள் இதுவரை வீட்டிற்கு வரவில்லை'' என தெரிவித்து இருந்தார்.
இது குறித்து திருவிக நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியில் உள்ள அரசு நூலகத்தின் பராமரிப்பற்ற அறையில் தனது இரண்டு தோழிகள் மற்றும் மூன்று ஆண் நண்பர்களுடன் சிறுமி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து மூன்று சிறுமிகள் மற்றும் அவரது ஆண் நண்பர்களை மீட்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
புகாரில் கூறப்பட்டிருந்த 12 வயது சிறுமிக்கு 14 மற்றும் 16 வயது சிறுமிகள் இருவரும் தோழிகள் ஆவர். இந்த மூவரும் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த கலிமுல்லா (21), அகரம் செங்கல்வராயன் தெரு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (19), பெரம்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆகிய மூவருடன் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், எட்டாம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று தோழியின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறி விட்டு மேற்கண்ட நபர்களுடன் நூலகம் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மூன்று சிறுமிகள் மற்றும் மூன்று ஆண் நண்பர்களும் சேர்ந்து நூலகத்தின் மொட்டை மாடிக்கு சென்று இரவு முழுவதும் தங்கியுள்ளனர். அப்போது சிறுமிகளுடன் ஆண் நண்பர்கள் அத்துமீறியுள்ளனர்.
சம்பவ இடத்தை கண்டறிந்து சென்ற போலீசார் சிறுமிகளை மீட்டனர். மேலும், அந்த நேரத்தில் மேற்கண்ட மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அங்கு மேலும் மூன்று பேர் இருந்துள்ளனர். அவர்களை விசாரித்ததில், பெரவள்ளூரை சேர்ந்த 17 வயது சிறுவன், முகமது ஜாபர் (22) மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு சிறுமிகள் மூன்று பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த திரு.வி.க. நகர் போலீசார் இந்த வழக்கை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிகளை மருத்துவ பரிசோதனை முடித்து காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கலிமுல்லா என்கிற அலி, அபிஷேக், சையத் முகமது ஜாபர் ஆகிய மூவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற மூன்று சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.