சென்னை: 1997ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த ’இருவர்’ திரைப்படம். பல ஆண்டுகள் கடந்த நிலையிலும் சினிமா ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றோடு இருவர் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளாகின்றன. 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராயின் திரைப்பயணமும் ’இருவர்’ திரைப்படத்தில்தான் தொடங்கியது. இதற்கு முன்பே மணிரத்னம் இயக்கும் படங்களை வெவ்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தானே தயாரித்து வந்தாலும் இப்போதுவரை எல்லாருக்கும் தெரிந்த அவரது தயாரிப்பு நிறுவனமான ’மெட்ராஸ் டாக்கீஸ்’ மூலம் தயாரித்த முதல் திரைப்படம் ’இருவர்’ தான்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு தமிழில் இதுதான் முதல் திரைப்படம். தற்போது பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ள பிரகாஷ் ராஜ், ’இருவர்’ திரைப்படத்தின் தமிழ்ச்செல்வன் கதாபாத்திரத்திற்காகத்தான் தனது முதல் தேசிய விருதை பெற்றார். இப்படி நிறைய முதல் அங்கீகாரங்களையும் நிறைய முதல் முயற்சிகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள திரைப்படம்தான் ’இருவர்’.
ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் தங்களது கனவை நோக்கிய பயணத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். தொழில் நிமித்தமாக நண்பர்களாகின்றனர். ஆனந்தனுக்கு பெரும் நடிகனாக வேண்டும் என்ற கனவு. தமிழ்ச்செல்வனுக்கு அரசியலையும் சமூகத்தையும் மாற்ற வேண்டும் என்ற கனவு. அதற்கு தனது எழுத்தை சினிமா வழியே பயன்படுத்த நினைக்கிறான். இருவரும் தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களாகின்றனர்.
நாட்கள் செல்ல செல்ல நெருங்கிய நண்பர்களான ஆனந்தனும் தமிழ்ச்செல்வனும் தங்களது கனவுகளைத் தாண்டிய பெரும் கனவை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த பயணத்தில் இருவரும் எதிரெதிராக நிற்கவும் தயங்கவில்லை. ஆனால் இறுதியில் யாரோ ஒருவர்தானே வெற்றி பெற முடியும், ஆனால் இங்கு இருவரும் வெற்றி பெறுகிறார்கள்.
உண்மையான கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் பின்னணியாக கொண்டு கற்பனையுடன் உருவாக்கப்பட்ட படம்தான் ’இருவர்’. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட இரு நண்பர்களின் கதையாகத்தான் ’இருவர்’ திரைப்படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பார் மணிரத்னம். அதுதான் இருவர் திரைப்படத்தின் திரைக்கதை, வசனங்களின் சிறப்பு.
உண்மை கதாபாத்திரங்கள், சம்பவங்கள் கதையில் எடுத்தாளப்பட்டாலும் ’இருவர்’ சுயசரிதை கிடையாது. உண்மைத் தகவல்களே இப்படி நடந்திருந்தால் எப்படி இருக்கும் பாணியில் சுவராசியமான கற்பனையாக காட்சிகளும் திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கும். கதாபாத்திரங்களும் மிகவும் செறிவுடையதாக உருவாக்கப்பட்டிருக்கும்.
படத்தின் தொடக்கத்தில் ஆனந்தனுக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகள், படம் முடியும்போதும் இருக்கும். ஆனால், முற்றிலும் மாறியிருக்கும். தொடக்கத்தில் பணம், புகழைத் தேடும் ஆனந்தன் இறுதியில் பதவியையும், அதிகாரத்தையும் குறிக்கோளாக கொண்டிருக்க, தமிழ்ச்செல்வனுக்கோ தமிழர் உரிமை, சமூக மாற்றம், ஆட்சியமைத்தல் என்பது தொடக்கத்தில் லட்சியமாக இருக்கும்.
ஆனால், கதை நகர நகர தன்னிடமிருந்து அதிகாரத்தைப் பறித்த ஆனந்தனே, தமிழ்ச்செல்வனுக்கு ஒரே குறிக்கோளாகிவிடுவார். படத்தின் ஆரம்பத்தில் ஆனந்தனின் புகழை அரசியலாக்குவதில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கும் தமிழ்ச்செல்வன், பிற்பகுதியில் அதே புகழைக் கண்டு எரிச்சலடைவார். உலகத்தையே சாதிக்கக்கூடிய மாற்றக்கூடிய பெரும் இலட்சியங்களைக் அடைந்திருந்தாலும் மனிதர்கள் எவ்வளவு அகவய உணர்வுகளால் நிரம்பப் பெற்றவர்கள் என்பதை கதாபாத்திரங்களின் முரண்களின் வழியே திறம்பட சொல்கிறார் மணிரத்னம்.
சிறு சிறு வார்த்தைகளும் மெல்லிய உணர்வுகளும்தான் மனிதர்களை ஒருவரோரு ஒருவரை பிணைக்கின்றன. அவையே அவர்களை விலக்கி வைக்கவும் வல்லது. சின்ன கதாபாத்திரங்கள்கூட இந்த உணர்பூர்வமான கதைக்கு உயிரூட்டுகின்றன. முதல் படத்திலேயே ஐஸ்வர்யா ராய்க்கு புஷ்பவள்ளி, கல்பனா என இரு கதாபாத்திரங்கள்.
ஆனந்தனின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு போல புஷ்பவள்ளியோ யாருக்கும் தெரியாத ஒரு கிராமத்து பெண், ஆனால் கல்பனா நாடே அறிந்த மிக முக்கிய நடிகை. இரண்டுக்குமான வேறுபாடுகளை முதல் படத்திலேயே நடிப்பின் மூலம் நிகழ்த்தியிருப்பார் ஐஸ்வர்யா ராய். அதே போன்று நாசர், ரேவதி, கௌதமி, ராஜேஷ், டெல்லி கணேஷ் என தேர்ந்த நடிகர்கள் பலரும் நிஜ நிழல் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிருப்பார்கள்.
படத்தில் 1950,60கள் காலகட்டத்தின் திரைப்படங்களைப் பிரதியெடுக்கும் வசனங்கள், அப்போதைய தமிழ்நாட்டின் அரசியல் மேடைகளில் பேசப்பட்ட அரசியல் உரைகள் என இருவேறுபட்ட தளங்களுக்கும் சரி, கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் சாதாரண உரையாடல்களுக்கும் சரி மிகப் பொருத்தமாக வசனங்கள் எழுதப்பட்டிருந்தது. ஆரம்பத்திலிருந்து இறுதி தமிழ்ச்செல்வனின் அனைத்து வசனங்களும் நெருப்பு பொறி போல விழுந்து கொண்டே இருக்கின்றன. படத்தின் கலை உருவாக்கமும் அந்த காலகட்டடத்திற்கான நியாயங்களை செய்துள்ளது.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கான மிகப்பெரிய பலம். 1:1 எனப்படும் சதுர காட்சி சட்டகத்திற்குள் மொத்த படமும் எடுக்கப்பட்டிருக்கும். நாம் பார்க்கும் சாதரண திரைப்பட சட்டகம் இல்லை இது. இருவர் திரைப்படத்தில் 1950,60கள் காலகட்டத்தின் திரைப்பட உருவாக்கங்களை காட்டுவதற்காக இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அப்போது அனைத்து திரைப்படங்களும் 1:1 என்ற சதுர காட்சி சட்டகத்திற்குள்ளயே உருவாக்கப்பட்டிருந்தன. அதனாலேயே இந்த காட்சி சட்டகத்தை பயன்படுத்தியிருப்பார்கள்.
இதையும் படிங்க: இனி ’ஜெயம் ரவி’ வேண்டாம், ரசிகர் மன்றம் வேண்டாம்.. ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கை
தமிழ்நாட்டில் இப்போது வரை தேசிய கட்சிகளுக்கென தனி செல்வாக்கு இல்லாமல் இருப்பதற்கு காரணம் திராவிட அரசியல் தான். அந்த அரசியலின் முகங்களாக இருக்கும் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகிய தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களில் இருந்து கற்பனையாக உருவாக்கப்பட்ட திரைப்படமே ’இருவர்’. தலைவர்களைப் பற்றிய சுயசரிதைகள் உருவாக்கப்படுவது அனைத்து மொழிகளிலும் நிகழ்வதுதான்.
ஆனால் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த முக்கிய அரசியல் கொள்கைத் தலைவர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோரைப் பற்றி நேரடியான சுயசரிதை திரைப்படங்கள் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ’இருவர்’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது.