புதுடெல்லி: இயற்கை பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை குறைக்க, வானிலை அறிவியலின் முன்னேற்றம் உதவியது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பூகம்பங்களுக்கான எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க விஞ்ஞானிகளை வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 150 ஆண்டு நிறைவை கொண்டாடும் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, உயர் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டல கண்காணிப்புகளை செயல்படுத்துவது, அடுத்த தலைமுறை ராடார்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் உயர் செயல்திறன் கணினிகளை செயல்படுத்துவதற்கான 'மிஷன் மௌசம்' (Mission Mausam) திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
மிஷன் மௌசம்
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவை வானிலைக்கு தயாரானதாகவும், காலநிலைக்கு ஸ்மார்ட்டாகவும் மாற்றுவதற்காக ‘மிஷன் மௌசம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். 'மிஷன் மௌசம்' வானிலை மற்றும் காலநிலை செயல்முறைகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும். மேலும் நீண்ட காலத்திற்கு வானிலை மேலாண்மை மற்றும் காற்றின் தரத் தரவை வழங்கும்.
இதையும் படிங்க: தமிழர் பாரம்பரிய முறைப்படி தலைப் பொங்கல் கொண்டாடிய திரிபுரா பெண்!
எந்தவொரு நாட்டின் பேரிடர் மேலாண்மை திறனுக்கும் வானிலை ஆய்வு மிக முக்கியமான பங்களிப்பை வழங்குகிறது. இயற்கை பேரழிவுகளின் தாக்கத்தை குறைக்க, வானிலை ஆய்வின் செயல்திறனை அதிகரிக்க வேண்டும். அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும், அதன் முழுத் திறனையும் பயன்படுத்திக் கொள்ளும் திறனும்தான் ஒரு நாட்டின் உலகளாவிய நற்பெயரை வடிவமைப்பதற்கான மூலக்கல்லாகும்.
விஞ்ஞானிகளுக்கு வலியுறுத்தல்
நிலநடுக்கங்களுக்கான எச்சரிக்கை சிஸ்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த திசையில் செயல்பட வேண்டும். வானிலை தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறன்கள் கணிசமாக மேம்பட்டுள்ளது. இது நாட்டுக்கு மட்டுமின்றி உலக சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இன்று நமது ஃப்ளாஷ் வெள்ள வழிகாட்டுதல் அமைப்பு முக்கியமான தகவல்களை வழங்குகிறது. எந்தப் பேரிடர் ஏற்பட்டாலும், அண்டை நாடுகளுக்கு உதவி செய்யும் முதல் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது'' என பிரதமர் தெரிவித்தார். மேலும், ஐஎம்டியின் 150 ஆண்டுகளைக் குறிக்கும் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.