தேனியில் கனமழை; வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் மக்கள் அவதி! - rain water entering the houses in theni
🎬 Watch Now: Feature Video
Published : Nov 24, 2023, 12:56 PM IST
தேனி: தேனியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று (நவ.23) இரவு பெய்த கனமழையின் காரணமாக 10க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தேனி மாவட்டம் போடி அருகே, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் காலனி உள்ளது. இப்பகுதியில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கூலி வேலை செய்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு பெய்த தொடர் கனமழை காரணமாக, இப்பகுதியில் உள்ள ஓடை வழியாக மழைநீர், இங்குள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது.
எதிர்பாராத விதமாக மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கியது. இதனால் குடியிருப்புவாசிகள் இரவு முழுவதும் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாயினர். மேலும், வீடுகளில் புகுந்த மழைநீர் தற்பொழுது வரை வெளியேறாததால், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் வீட்டிற்குள் நுழைவதாக குடியிருப்புவாசிகள் புகார் கூறுகின்றனர்.
தொடர்ந்து, வீட்டில் மழை நீர் மூழ்கியுள்ளதால், சமைக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் உள்ளனர். எனவே, வீடுகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடியிருப்புவாசிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.