Palani:பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மே தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். மலையடிவாரத்தில் தீர்த்தக் குடங்கள், காவடிகளை எடுத்துவரும் பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடி கிரிவலம் வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோயில், திருவாவினன்குடி முருகன் கோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மலைமீதுள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்புக் காரணமாக மலைமீது செல்லக்கூடியப் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.
குடமுழுக்கு நினைவரங்கம், யானைப் பாதை வழியாக பக்தர்கள் மலை மீது செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி வரவும் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, பழனி முருகன் கோயிலுக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.