தாயை இழந்த யானை குட்டிகள் பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் நடமாட்டம்
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் கடந்த மாதம் விவசாயி ஒருவர் தோட்டத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தன. இதில் ஒரு யானையின் இரண்டு குட்டி யானைகள் அங்கேயே சுற்றித் திரிந்து வந்தன.
இதனிடையே வன விலங்கு ஆர்வலர் யானைகள் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதுதொடர்பான விசாரணையில், தாயை இழந்து உயிரோடு இருக்கும் இரண்டு யானைக் குட்டிகளை பத்திரமாகப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மாரண்டஅள்ளி அடுத்த அத்தி முட்டுலு வழியாக வனத்திற்குள் சென்ற குட்டி யானைகள் எங்கே இருக்கிறது என்ன செய்கிறது என்று தெரியாமல், பாலக்கோடு வனத்துறையினர் 20 நாட்களாக வனப்பகுதியில் தேடியுள்ளனர். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியிலுள்ள பெட்டமுகிலாளம், வடக்கு வனப்பகுதியில் இரண்டு குட்டி யானைகள் உயிரோடு இருப்பதும், ஆரோக்கியமாகச் சுற்றி திரிந்து வருவதும் தெரிய வந்திருக்கிறது.
ஆகவே, யானைக் குட்டிகளைக் கண்காணிக்கும் பணிகளில் இரண்டு மாவட்ட வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் உயிருடன் நடமாடி வருவது விவசாயிகள், பொதுமக்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் என பலரையும் நிம்மதியடைய வைத்திருக்கிறது.