நிரம்பி வழியும் கும்பக்கரை அருவி.. ஆறு போல் மாறிய சாலை..!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 3, 2024, 2:01 PM IST
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகள் வட்டக்கானல், பாம்பார்புரம். இந்த பகுதிகளில் நேற்று (நவ.2) மாலை ஆரம்பித்த மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த நிலையில் அருவியில் நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து நீர் பிடிப்பு பகுதிகளிலும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேலும் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீர் சாலையில் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கும்பக்கரை அருவியில் நீர் குறைந்து நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்த நிலையில் இன்று மீண்டும் குளிப்பதற்கு தடை விதித்துள்ளதால் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.