சென்னை: அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டது மற்றும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் அளித்த விண்ணப்பங்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதேபோல் உரிமையியல் வழக்குகளின் விசாரணை முடியும் வரை அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கில், அனைத்து தரப்பினரின் விளக்கத்தைக் கேட்டு சூரியமூர்த்தியின் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்காத சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் ஆணையம் விசாரணை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (பிப்ரவரி 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணையின் போது, ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு முன் அளித்த மனுக்களுக்கு பதிலளிக்கவே தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. எனவே, இதில் தனிப்பட்ட அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது. மேலும், மனுக்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், முன்கூட்டியே இந்த வழக்கை எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜாமீன் மனு தள்ளுபடி!
அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், “உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதிலளித்ததாகவும், மற்றவர்கள் மனுக்களை விசாரிக்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாகவும்,” வாதிடப்பட்டது.
மேலும், “உள்கட்சி விவகாரங்கள் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இல்லாத சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது. அதனால் மற்றவர்கள் அளித்த மனு மீது விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது,” என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் தரப்பின் வாதத்துக்காக வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று (பிப்ரவரி 7) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.