சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், தமிழ்நாடு - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகர்வதால், அடுத்த 7 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் ஒரு சில பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, அண்ணா சாலை, அமைந்தகரை, கோயம்பேடு, பாரிமுனை, எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோடம்பாக்கம், ராயபுரம், வேளச்சேரி, பெருங்குடி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, தாம்பரம், மதுரவாயில், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 12, 2024
இதையும் படிங்க: சென்னை மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
நேற்று இரவு முதல் பெய்த மழையால், இரவா? பகலா என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும், அதேபோல் இன்று வட கடலோர மாவட்டங்களாக இருக்கக்கூடிய சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்த நிலையில், தொடர் மழை காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.