தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், அக்டோபர் 22ஆம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக உடற்கல்வி ஆசிரியர் 5 மாணவிகளை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மாணவிகளை அவர் மிரட்டியுள்ளதாகவும் தெரிகிறது. இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளியில் இதுகுறித்து முறையிட்டும், பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என்று பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போலி மருத்துவராக நாடகம்; கருக்கலைப்பு தம்பதியினர் சிக்கியது எப்படி?
இதனைத் தொடர்ந்து நேற்று (நவ.12) மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாவட்ட கல்வி அலுவலர் உள்பட அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து பள்ளிக்கு சென்று நேரில் சென்ற திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்ட அலுவலர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர் தலைமறைவாகி இருக்கும் நிலையில், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் இணைந்து கோவையில் வைத்து இன்று கைது செய்தனர். இந்த நிலையில் இன்று பள்ளியின் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி மற்றும் பள்ளியின் செயலர் செய்யது அகமது ஆகியோரை குலசேகரபட்டினம் காவல்துறையினர் கைது செய்து, திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது திடீரென பள்ளிச் செயலர் செய்யது அகமது தனக்கு நெஞ்சுவலிப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை காவல்துறை வாகனத்தில் அழைத்து சென்று திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.