கிருஷ்ணகிரி: கர்நாடக மாநிலம் பன்னருகட்டா (Bannerughatta) வனப்பகுதியிலிருந்து 15 நாள்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேவாரபெட்டா வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் பன்னருகட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதியான ஜவளகிரி வழியாக காட்டு யானைகள் வருவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து ஜவளகிரி வனப்பகுதிக்குள் நுழைந்து தஞ்சம் அடைந்துள்ளன. தற்போது இந்த காட்டு யானைகள் மெதுவாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் நுழைந்து, அப்பகுதியில் ராகி, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகிய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது, ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் தஞ்சமடைந்த காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினர் இரவும் பகலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் வெளியே வருவதால் நாகமங்கலம், கடூர், வரகான பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூர் பேருந்து நிலையத்தில் உலா வந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த மக்கள்..!
யானைகளுக்கு இடையே மோதல்: ஓசூர் அருகே உள்ள உரிகம் வனப்பகுதியில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு உணவு மற்றும் தண்ணீர் தேடி சுற்றித்திரிந்த இரண்டு ஆண் காட்டு யானைகளுக்கு இடையே கடுமையாக மோதல் ஏற்பட்டு, அந்த மோதலில் ஒரு காட்டு யானை மற்றொரு காட்டு யானையை தந்ததால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அந்த யானை பெரிய பாறை பகுதியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உயிரிழந்த காட்டு யானையின் உடல் அப்பகுதியிலேயே கிடந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற பொதுமக்கள் துர்நாற்றம் வீசுவதை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது அங்கு காட்டு யானையின் உடல் எலும்பு கூடாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இதுகுறித்து அவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி தலைமையிலான வனத்துறையினர், காட்டு யானையின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் எலும்பு கூடாக கிடந்த ஆண் காட்டு யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து, அதே இடத்தில் அடக்கம் செய்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்