நீலகிரியில் கொட்டித் தீர்த்த கனமழை...குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 4, 2024, 5:51 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மிக அதிககனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து மண் சரிவு ஏற்பட்டும் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13வது கொண்டை ஊசி வளைவு அருகே பாறை சரிந்து விழுந்தது.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினர், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். மேலும் குன்னூர் மாடல் ஹவுஸ் பகுதியில் நேற்று இரவு கொட்டி தீர்த்த மழையில் குடியிருப்பு பகுதியில் காட்டாறு போல மழை நீர் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உறங்காமல் காத்திருந்தனர்.
வருவாய்த் துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதிப்படையும் பகுதிகளுக்கு சென்று இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு விடுத்துள்ளார்.
மேலும் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையிலான மலை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் விழுந்து ரயில் பாதை சேதமடைந்துள்ளதால் அதன் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.