மதுரை: மதுரை மாவட்டம், திருவாதவூர் அகதிகள் முகாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான கான்கிரீட் வீடுகளையும், அடிப்படை வசதிகள் செய்து உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவில், தமிழக மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலர், புலம்பெயர்ந்தோர் நல வாரியத்தின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமால்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் திருவாதவூர் அகதிகள் முகாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான கான்கிரீட் வீடுகளையும், அடிப்படை வசதிகள் செய்து உத்தரவிடக் கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராம பஞ்சாயத்தின் எல்லையில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் வசித்து வரும் இவர்கள் மிகச் சிறிய அளவிலான ஆஸ்பெட்டாஸ் போட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.
தற்போது 520க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்த நிலையில், கான்கிரீட் மேல் தளம் இல்லாமல் காணப்படுகின்றன. முழுமையாக மின்சாரமும் வழங்கப்படுவதில்லை. இதனால் முதியவர்களும், நோயாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 2022ல் 30 கான்கிரீட் வீடுகளும், 10 கழிவறைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன. இருப்பினும் தற்போது எந்த கழிவறையும் பயன்படுத்தும் நிலையில் இல்லை. 20 கழிவறைகள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன.
இரண்டாயிரம் நபர்களுக்கு 20 கழிவறைகள் என்பது மிகவும் சிரமமான நிலையை ஏற்படுத்துவதால், ஏராளமானவர்கள் திறந்தவெளியை கழிவறையாகப் பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பெண்கள் வெளியே செல்கையில் தேவையற்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற வளாக பாதுகாப்பு.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
எனவே மதுரை மாவட்டம், திருவாதவூர் அகதிகள் முகாமில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியான கான்கிரீட் வீடுகளை கழிவறை வசதியோடு கட்டி தரவும், பொதுக் கழிவறை, முறையான சாலை வசதி, தெரு விளக்கு வசதி, முழுமையான மின்சார விநியோகம் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "வழக்கு தொடர்பாக தமிழக மறுவாழ்வுத்துறை முதன்மைச் செயலர், புலம்பெயர்ந்தோர் நல வாரியத்தின் ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திருவாதவூர் அகதிகள் முகாமின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.