மதுரை: திருச்சியைச் சேர்ந்த கணேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திருச்சி தில்லை நகரில் கி.ஆ.பெ விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கி வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் இங்குக் கல்வி பயின்றனர்.
தற்போதைய பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகத்தின் உள்ளாகச் சாதிய கூட்டமைப்பு அலுவலகத்தைத் தொடங்கி நடத்தி வருகிறது. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் ஒரு சமூகத்தின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அந்த சமூகத்திற்கான திருமண தகவல் மையமும் பள்ளி வளாகத்தினுள் இயங்கி வருகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை எனவும், அதனால் திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: வேலூரை உலுக்கிய பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு...நான்கு பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை!
இந்த வழக்கு நேற்று (ஜனவரி 30) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த புகார் மனு தொடர்பாக திருச்சி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கி.ஆ.பெ.விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.