சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடைசியாக 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்' இந்நிலையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும், 3டி தொழில் நுட்பத்திலும் உருவாகியுள்ளது. இந்தப் படம் கோவா, சென்னை மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா மூன்று ஆண்டு காலம் கடினமாக உழைத்துள்ளார். இத்திரைப்படத்தில், நடிகர் சூர்யா கங்குவா, ஃபிரான்சிஸ் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில் இப்படம் வெளியாக உள்ளது. எப்படியும் ரூ.2000 கோடி வசூல் கிடைக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஞானவேல் ராஜா எதிர்பார்ப்பில் உள்ளார். ஆனால் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு திரைப்படங்களில் ஆன்லைன் புக்கிங் சிறிய திரையரங்குகளில் இன்னும் தொடங்கவில்லை. விநியோகஸ்தர் மற்றும் திரையரங்குகள் உரிமையாளர்கள் இடையே பங்குத்தொகை ஒப்பந்தம் இன்னும் முடியாததாலும், விநியோகஸ்தர் தரப்பில் 75 சதவீதம் கேட்பதால் ஒப்பந்தத்தில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ’கங்குவா’ திரைப்பட சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி; அட்வான்ஸ் புக்கிங்கில் தூள் கிளப்பும் வசூல்!
வழக்கமாக புதிதாக வெளியாகும் தமிழ்ப் படங்களுக்கு 60:40 என்ற அடிப்படையில் தான் ஒப்பந்தம் போடப்படும். ஆனால் இம்முறை விநியோகஸ்தர் தரப்பில் இருந்து 75 சதவிதம் பங்கு கேட்பதால் திரையரங்குகள் உரிமையாளர்கள் யோசிப்பதாக கூறப்படுகிறது. முதல் வாரமே இவ்வளவு சதவீதம் கேட்டால் எங்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது என்பது திரையரங்குகள் உரிமையாளர்களின் வாதமாக உள்ளது. இன்றுக்குள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, விரைவில் ஆன்லைன் புக்கிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்