‘என்னை பற்றி மட்டும் கேள்’..! செந்தில் பாலாஜி குறித்த கேள்விக்கு கொந்தளித்த அமைச்சர் நேரு! - செந்தில் பாலாஜி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக திண்டுக்கல்லில் ரூ.132.52 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடக்க விழா நிகழ்ச்சி எம்விஎம் நகரில் உள்ள காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட வளாகத்தில் நடைபெற்றது. இந்த திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார்.
பின்னர், அங்கு நடைபெற்ற பூமி பூஜையின் போது தனது காலணிகளை கழட்டி விட்டு பூமி பூஜையில் கலந்து கொண்டார். பூஜை முடிந்ததும் அங்கு வந்த பழனி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அமைச்சர கே.என். நேருவின் காலணியை கூட்ட நெரிசலில் இருந்து தேடி எடுத்து தந்து தனது விசுவாசத்தை காட்டினார்.
இதனை சற்றும் எதிர்பாராத அமைச்சர் நேரு பரவாயில்லை என்பது போல சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமாரை தட்டிக்கொடுத்தார். தொடர்ந்து, திட்டப்பணிகள் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நேரு, “முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கி கொடுத்த நிலையில் திண்டுக்கல்லில் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக ரூ.132.52 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் சீராக நடைபெறும்.
அதேபோல், சாலைகள், பாலங்கள், கழிவுநீர் தொட்டிகள், மழை நீர் வடிகால்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் முதலமைச்சர் நீதி ஒதக்கவுள்ளார்” என்றார். தொடர்ந்து, செந்தில் பாலாஜி வீட்டில் வருமானத்துறையினர் சோதனை நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு “என்னை பற்றி மட்டும் கேளுங்க” என கூறிவிட்டு, கேள்விக்கு பதிலளிக்காமல் கோவமாக அங்கிருந்து சென்றார்.
இதையும் படிங்க: "உற்பத்தி மட்டுமில்ல, உள்கட்டமைப்பிலும் முதலீடு" ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு