ART Jewelry Scam: அதிக வட்டி ஆசைக்காட்டி மோசடி.. ஜூவல்லரி உரிமையாளர்கள் கைது! - today news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18725244-thumbnail-16x9-che.jpg)
சென்னை: தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களைத் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 1 இலட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றிய ஏஆர்டி ஜூவல்லரி தனியார் நிறுவனம் சுமார் 427 முதலீட்டாளர்களிடமிருந்து 6.5 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்து உள்ளது.
பணத்தை இழந்த பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது ரூபாய் 7.5 இலட்சம் பணம், 80 இலட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், வங்கிக் கணக்கிலிருந்த 3.5 லட்சம் ரூபாய் பணம் போன்றவற்றை போலீசார் முடக்கம் செய்தனர். இந்த வழக்கில் நிறுவனத்தின் இயக்குநர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆரோன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்குப் பதிவான நிலையில் இருவரும் தொடர்ச்சியாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்தனர். அவர்களைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஏஆர்டி ஜூவல்லரி மோசடி செய்த வழக்கில் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகிய சகோதரர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
இதை அடுத்து நோளம்பூரில் உள்ள அந்த மாலின் பூட்டை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று தீவிரமாகச் சோதனை செய்தனர். சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டது, அதிகாரிகள் மாலில் சோதனை செய்வது போன்ற தகவல்கள் தெரிந்தும் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோர் அந்த நிறுவனத்தின் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் இழந்தப் பணத்தை உடனடியாக பெற்று தர வேண்டும் என அதிகாரிகளிடம் பேசினர். அதற்குப் பதிலளித்த போலீசார், “சோதனை நடைபெற்று வருவதாகவும் தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறினர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு அதிக அளவில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Fake Passport: போலி பாஸ்போர்ட் தயாரித்த விவகாரம்: சென்னையில் மேலும் ஒருவர் கைது!