மேகமலையில் இறங்கிய “அரிசி கொம்பன்” சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்த வனத்துறை - தேனி
🎬 Watch Now: Feature Video
தேனி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜக்காடு அருகே உள்ள சின்னக்கல் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றி திரிந்த அரிசி கொம்பன் என்ற யானை பல நபர்களை பந்தாடி உயிர் பலி வாங்கியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று மயக்க ஊசி செலுத்தி 3 கும்கி யானைகள் உதவியுடன் பல கட்ட போராட்டத்திற்குப் பிறகு அரிசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அன்றைய தினம் இரவே பிடிபட்ட அரிசி கொம்பன் யானையை தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கண்ணகி கோட்ட வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் விட்டனர். மேலும் யானையைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு கேரள வனத்துறையினர் கண்காணித்தும் வந்தனர்.
இந்நிலையில் கேரள வனப்பகுதியில் விடப்பட்ட அரிசிக் கொம்பன் யானை தற்போது அருகில் உள்ள தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் நுழைந்திருப்பது வனத்துறையினர் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாறு, மணலாறு, ஹைவேவிஸ் உள்ளிட்ட இடங்களில் அரிசி கொம்பன் யானை உலவி வருகிறது.
இதனால் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட 7மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானை நடமாட்டம் இருப்பதால் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு வனத்துறையினர் தடை வைத்துள்ளனர். இதனிடையே அரிசி கொம்பன் நடமாட்டம் உள்ள பகுதிகளில் 24 மணி நேரமும் வனக் குழுவினர் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அரிசி கொம்பனால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.