மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் சீறிப்பாய்ந்து செல்லும் ட்ரோன் காட்சி!
🎬 Watch Now: Feature Video
சேலம்: காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து 90வது ஆண்டாக இன்று (ஜூன் 12) குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதனை தொடர்ந்து, அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி வரவேற்றார். அணையில் முதல் கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக 10 ஆயிரம் கன அடி வரை டெல்டா பாசனத்தின் தேவையைப் பொறுத்து நீர் திறந்து விடப்படும்.
இந்த நீரானது மூன்றரை நாட்களில் 200 கிலோமீட்டர் தூரம் பயணித்து கல்லணையை சென்று சேரும். சாகுபடிக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் டெல்டா விவசாயிகள் மட்டுமன்றி, காவிரிக் கரையோரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி சுமார் 16.50 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப்படும். இந்த மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் சீறிப்பாய்ந்து செல்லும் ட்ரோன் காட்சி கண்ணைக் கவருவதாக உள்ளது.