ராமநாதபுரம்: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை உலக மரபு வாரம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டு 'பன்மைத்தன்மையை கண்டறிந்து அனுபவம் கொள்ளுதல்' (Discover and Experience Diversity) என்பதை யுனெஸ்கோ முழக்கமாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவ, மாணவியர் 25 பேர் உலக மரபு வார விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்திலுள்ள ராமலிங்கவிலாசம் அரண்மனையை பார்வையிட்டனர். அப்போது, அரண்மனையின் உருவாக்கம், அதன் ஓவிய சிறப்பு பற்றி மன்றச் செயலரும் ஆசிரியருமான வே.ராஜகுரு மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
![ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-12-2024/23029594_1015_23029594_1733198849641.png)
அப்போது வே.ராஜகுரு கூறியதாவது, "தென்னிந்தியாவிலேயே முழுவதும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரே அரண்மனையான இது கிழவன் சேதுபதியால் கட்டப்பட்டது ஆகும். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என ஒரு கோயில் போன்ற அமைப்பில் அரண்மனை உள்ளது. மகாமண்டபத்தில் உள்ள சுண்ணாம்பு, செங்கலால் கட்டப்பட்ட தூண்கள், மதுரை நாயக்கர் மகால் தூண்களின் சிறிய அளவினதாக உள்ளன.
அர்த்தமண்டபத்தில் 20, கருவறையில் 12 என 32 வழுவழுப்பாக தேய்க்கப்பட்ட அழகிய கருங்கல் தூண்கள் உள்ளன. கருவறை பகுதியை ராமர் பீடம் என்கிறார்கள். மகாமண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சேதுபதிகள் பட்டம் சூட்டிக்கொள்ளும் அபிசேகமேடை உள்ளது. இயற்கையான மூலிகை வண்ணத்தில் உருவான அரண்மனையிலுள்ள ஓவியங்கள் 350 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
![ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனையில் உள்ள மகாவீரர் சிற்பம் குறித்து வே.ராஜகுரு மாணவர்களுக்கு விளக்கும் காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-12-2024/23029594_741_23029594_1733198686623.png)
ராமாயண, பாகவத காட்சிகள், சேதுபதிகள் வணங்கிய தெய்வங்களின் உருவங்கள், தஞ்சை மராட்டியர்களுடன் போர்க்காட்சிகள், மன்னர் பவனி வருதல், பலவகையான மதுக்குடுவைகள், பெண்களைக் கொண்டு உருவாக்கிய யானை, குதிரை உருவங்கள், கண்ணாடி பார்க்கும் ராணி ஆகிய சிறப்புமிக்க ஓவியங்கள் உள்ளன. இவை திருவுடையத்தேவர் என்ற முத்துவிஜய ரகுநாத சேதுபதி காலத்தில் வரையப்பட்டவை. ஓவியங்களில் உள்ள மன்னராக அவரே காணப்படுகிறார்.
இதையும் படிங்க: 'சலவைக் கல்லில் சேதுபதி மன்னரின் கல்வெட்டு' - பரமக்குடியில் கண்டெடுப்பு!
ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களும் அவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்த வண்ணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாயக்க மன்னர்களின் கலைப்பாணியை பின்பற்றியே சேதுபதிகளின் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
![ராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரண்மனையை வியந்து பார்க்கும் மாணவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-12-2024/23029594_115_23029594_1733198887863.png)
அப்போது, அரண்மனையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் தொழில்நுட்பம், ராமாயண, பாகவத ஓவியக் காட்சிகள், அதன்கீழ் எழுதப்பட்ட விவரங்கள், அரண்மனை அமைப்பு, சுரங்கம், உப்பரிகை, இளவட்டக்கல் ஆகியவற்றுடன் அக்காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய வளரி உள்ளிட்ட ஆயுதங்கள் போன்றவற்றை மாணவர்கள் வியப்பு கண்டு மகிழ்ந்தனர்.