ஆலப்புழா: கேரளாவில் நேற்று (டிச.2) திங்கட்கிழமை இரவு கேரளா அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வந்தனம் டிடி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கு மாணவர்கள் 11 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது, கார் எதிரே வந்த கேரளா அரசு விரைவுப் பேருந்து (KSRTC) மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. இந்த விபத்து இரவு 9.45 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய மருத்துவ மாணவர்கள்
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டுள்ளனர். மேலும், தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில், 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷமில்கான் என்பவருக்குச் சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் 11 பேரும் படம் பார்க்கச் சென்றதாகவும், ஆலப்புலாவிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்ததாகவும் சக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாகச் சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மழை காரணமாகவும், காரில் அதிக நபர்கள் பயணம் செய்ததாலும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விபத்துக்கான காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி; 4 பேர் உயிரிழப்பு - தெலங்கானா முதலமைச்சர் இரங்கல்!
உயிரிழந்த மருத்துவ மாணவர்கள்:
இந்த கோர விபத்தில் உயிரிழந்ததது மலப்புரம் கோட்டக்கல் பகுதியைச் சேர்ந்த தேவானந்தன் (19), பாலக்காடு சேகரிபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவ் வல்சன் (19), கோட்டயம் சேணாடு பகுதியைச் சேர்ந்த ஆயுஷ் ஷாஜி (19), லட்சத்தீவு ஆன்ட்ரோத்தைச் சேர்ந்த பிபி முஹம்மது இப்ராகிம் (19), கண்ணூர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஜப்பார் (19) ஆகியோர் என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்ததும், மேலும் 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சையில் உள்ள மாணவர்கள்:
Alappuzha, Kerala: Five first-year MBBS students from Vandanam Medical College lost their lives in a car collision with a KSRTC bus late Monday evening in Kalarcode, Alappuzha, Kerala. The car was severely damaged, and rescue teams had to cut it open to free the trapped… pic.twitter.com/YTYlKBOtI8
— IANS (@ians_india) December 3, 2024
மேலும், விபத்தில் காயமடைந்த மாணவர்கள் வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷைன் டென்சன் (19), ஆல்வின் ஜார்ஜ் (19), கிருஷ்ணதேவ் (19), கவுரி சங்கர் (19), முஹாசின் முஹம்மது (19), ஆனந்த் மனு (19) ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேருந்து நடத்துநர் மணீஷ் கூறுகையில், "வேகமாக வந்த கார் பேருந்து மீது மோதியது. அதில் கார் பேருந்துக்கு அடியில் நசுங்கி, முற்றிலுமாக நொறுங்கியது. அப்போது, மற்ற வாகனத்தில் சென்ற நபர்கள், அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, சிதைந்த காரில் சிக்கிய நபர்களை மீட்டனர். விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியதால், காரை பிரித்து எடுத்து உள்ளே சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டனர்.
கார் பேருந்தில் மோதிய போது, பேருந்தில் பயணித்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். 15 பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.