புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை குறித்து விவாதிக்க வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கியது. அதானி மீதான அமெரி்கக வழக்கு, சம்பல் வன்முறை, மணிப்பூர் கலவரம் ஆகியவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி கூட்டத்தொடரில் ஐந்து நாட்களாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தினர். எதிர்கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. எனவே கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். எனவே ஐந்து நாட்களாக அவை அடுத்தடுத்து நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லா தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆறாவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் கூடியது. மக்களவை கூடியதும், இருக்கையில் இருந்து எழுந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இது ஒரு முக்கியமான பிரச்னை, இந்த வன்முறையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பல் வன்முறை என்பது நன்றாக திட்டமிடப்பட்ட சதித்திட்டம். சகோதரத்துவம் கொல்லப்பட்டிருக்கிறது. அகழ்வாராய்ச்சி குறித்து நாடு முழுவதும் பாஜக பேசுகிறது. பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாட்டின் சகோதரத்துவத்தை அழிக்கின்றனர்," என்று கூறினார்.
இதையும் படிங்க: உடனடியாக வேண்டும் நிவாரணம்: ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த திமுக எம்பிக்கள்!
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா, இந்த விஷயம் குறித்து ஜீரோ ஹவரில் பேசலாம். அதுவரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். மேற்கொண்டு இந்த விஷயம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். சில சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் அவையின் நடுவே கூடி கோஷமிட்டனர்.
சமாஜ்வாதி எம்பிக்களுடன் சேர்ந்து காங்கிரஸ் எம்பிக்களும் கோஷங்களை எழுப்பினர். திமுக எம்பி ஆ.ராசாவும் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதாக கூறினார். தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்பிக்களும் சமாஜ்வாதிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் அனைவரும் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், கேள்வி நேரத்தில் பங்கேற்பதற்காக இந்தியா கூட்டணி எம்பிக்கள் தங்களது இருக்கைக்கு திரும்பினர்.