வேலூர்: திருவண்ணமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென தண்ணிரை வெளியேற்றியதால் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக பாமக நிறுவனர் இராமதாசு அறிக்கை வெளியிட்டார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு மாறானது. சிலர் அரசியல் ஆதாயம் தேடி இது போன்ற தகவல்களை பரப்பிவருகின்றனர்.
பெரும் மழைப் பொழிவு:
ஃபெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிந்தது. அதில், சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீரை தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி, சாத்தனூர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த விதிகளின் 2-ஆவது பிரிவில் சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டங்களில் வெள்ளம் ஏற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை:
இதன்படிதான், முன் கூட்டியே கணித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன. நீர் வெளியேற்றப்படும் போது கரைகளில் உள்ள கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் குறிப்பிட்டு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தார்.
இதையும் படிங்க: உடனடியாக வேண்டும் நிவாரணம்: ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்த திமுக எம்பிக்கள்!
ஆற்றில் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இழப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார். உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
துரித நடவடிக்கை:
வெள்ளம் வெளியேறிய போது அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாதைகள் மீது வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாத்தனூர் அணையின் உதவி செயற் பொறியாளர் அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார்.
அது அரசின் கவனத்திற்கு வந்து, உடனே முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. தென்பெண்ணையாற்றின் மேற்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகபட்ச மழை பெய்தது. குறிப்பாக ஊத்தங்கரையில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 50 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது.
திறக்கப்பட்ட நீரின் அளவு:
தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள முக்கிய நீர் தேக்கங்களான கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் அணைகள் ஏற்கனவே முழுக்கொள்ளளவை எட்டியிருந்தது. இதில் தென் பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடர்ந்து மிக விரைவாக அதிகரிக்க தொடங்கியது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119.0 அடியில் 110 அடியை 25.10.2024 அன்று எட்டியதை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் அவர்களால் நீர் வெளியேற்றும் விதிகளின்படி (Compendium Rules) அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து 01.12.2024 அன்று மாலை 8.00 மணியளவில் 31555 கன அடி 9.00 மணியளவில் 32000 கன அடி, 10.00 மணியளவில் 32000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில், சாத்தனூர் அணை பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருந்ததால் 01.12.2024 பி.ப. 10.00 மணியளவில் நான்காம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தி.மலை நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!
இந்நிலையில், 02.12.2024 அன்று அதிகாலை 1.00 மணியளவில் 1,06,000 கன அடி நீர்வரத்து வந்த வண்ணம் அதே அளவு வெளியேற்றப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அதிதீவிர கனமழை இடைவிடாமல் பெய்த வண்ணமே இருந்ததால் 02.12.2024 அன்று அதிகாலை 2.45 மணியளவில் ஐந்தாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
மேலும் 02.12.2024 அன்று அதிகாலை 3.00 மணியிலிருந்து 8.00 மணி வரை 168000 கன அடி/ வினாடிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டது. பெரு மழை தொடர்ந்து பெய்ததைத் தொடர்ந்து நீர் வரத்து அதிகமானதால் 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை டிசம்பர் 2-ம் தேதி முற்பகல் 2.45 மணிக்கு விடப்பட்டு வினாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள். பெரு மழையால் சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.