சென்னை: வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தொடர் கனமழை பெய்தது. இதன் விளைவாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நிவாரண நிதி வேண்டி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தன்னை அலைபேசியில் அழைத்து புயல் பாதிப்பு மற்றும் நிவாரணம் குறித்து பேசியதாக தனது எக்ஸ் தலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒன்றிய அரசிடம் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதி தொடர்பாக அவசர நிலையில் விவாதித்து, நிதி விடுவிப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து நாடாளுமன்ற குளிர்கால இன்றைய கூட்டத்தொடரின் போது, தமிழ்நாடு திமுக மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர்.
அதில் கனிமொழி, “தமிழகத்தில் ஃபெங்கல் புயலானது 14 மாவட்டங்களில் மொத்தம் 69 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி தனிநபர்களை பாதித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. தமிழக அரசுக்கு தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது,” என்பதை தெரிவித்துள்ளார்.
எனவே, (NDRF) தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடியை உடனடியாக விடுவிக்கவும், சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை நியமிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்த அவசர நிலையை அறிந்து ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு
மேலும் அதில் எம்பி டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள தீர்மான அறிக்கையில், “மிகுந்த கவனத்துடன் அவசர நிலையில் தமிழகத்தின் ஃபெஞ்சல் புயல் நிவாரணம் குறித்து விவாதிக்க பட வேண்டும் என்கிற நோக்கில் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன். கடலூர், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் கூறியது போல், சேதங்களை மதிப்பீடு செய்ய ஒன்றிய அரசு உடனடியாக ஒரு குழுவை அமைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்ப வேண்டும். இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” எனத் தீர்மானப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.