தருமபுரம் ஆதீனம் குமரக்கட்டளை சுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகத்தின் கழுகுப் பார்வை! - Mayiladuthurai

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 24, 2023, 5:05 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில், திருவாடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த நிலையில் இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனாகிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று (மார்ச் 24) வெகு விமரிசையாக நடைபெற்றது. 

இந்த கும்பாபிஷேக விழா கடந்த 19ஆம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 21ஆம் தேதி அன்று யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், மயிலாடுதுறை காவிரிக் கரையில் காவிரி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. 

அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, வெள்ளிக் குடங்களில் புனித நீரை நிரப்பி, அதனை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில்‌ யானை அபயாம்பிகை, திருக்கடையூர் கோயில் அபிராமி யானை, திருவையாறு கோயில் தர்மாம்பாள் யானை ஆகியவற்றின் மீது ஏற்றி ஊர்வலமாக மயூரநாதர் கோயிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்வின்போது 10க்கும் மேற்பட்ட மல்லாரி மேளக்கச்சேரி உடன் ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல, 100க்கும் மேற்பட்ட வேத சிவாகம பாடசாலை சிறுவர்கள் தேவாரப் பாடல்கள் பாடியே பின் தொடர, ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் பங்கேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 

பின்னர் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், மலர் தூவி புனித கடங்களை கால பூஜையில் வைத்து யாகசாலை பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. 

இந்த நிலையில் இன்று காலை 6ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் ஆகிய ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள் மற்றும் திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் ஆகியோர் முன்னிலையில் மகா பூர்ணாஹூதி செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. 

பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.