சென்னை: மதுரை, மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாகக் கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது.
மேலும், அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தகவல் வெளியானது. இதனை எதிர்த்து மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தல்லாகுளம் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு கடந்த 23 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை பதிவு செய்திருந்த வழக்குகளை தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்றதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
'' மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று உறுதி அளித்து, இந்த திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதையும் படிங்க: ஆளுநரே வேண்டாம் என சொல்லிட்டு எதுக்கு விஜய் சந்தித்தார்? - சரத்குமார் கேள்வி!
மேலும், இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும், தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது.
இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார்.
இதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.