போகோடா(கொலம்பியா): அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் கொலம்பியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் வந்த இரண்டு விமானங்களை முதலில் தரையிறக்க மறுத்த கொலம்பியா, இறக்குமதி பொருட்களுக்கு அதிக கட்டணம் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்ததால் பணிந்தது.
போதைப் பொருட்கள் தடுப்பு முயற்சிகளுக்காக நீண்டகாலமாக ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் அமெரிக்கா,கொலம்பியா நாடுகள் சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் விவகாரத்தில் மோதலில் ஈடுபட்டன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவர் என்று கூறினார். அதன்படி கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறிய நபர்களை கண்டறிந்து அவர்களை இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்கள் மூலம் டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்தியது.
அமெரிக்காவில் இருந்து வந்த இரண்டு விமானங்களையும் தரையிறங்கக் கூடாது என்று கொலம்பியா அரசு உத்தரவிட்டது. இதனால், டிரம்ப் அதிரடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். கொலம்பியாவுக்கு விசா கட்டுபாடுகள் விதித்தார். மேலும் கொலம்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித கட்டணம் விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். கடந்த ஒரு வாரத்தில் கொலம்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தம் 50 சதவிகிதம் அளவுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஆதரவின்றி இறந்தவர்களுக்கு நல்லடக்கம்! 'கோட்டை அமீர்' விருது பெற்ற பைக் மெக்கானிக்!
இதனிடையே அமெரிக்காவின் நடவடிக்கைக்குப் பதிலடியாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித கட்டணங்கள் விதிப்பதாகக் கூறினார். எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்திருந்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ,"அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா கண்ணியமாக நடத்த வேண்டும். உரிய மரபை கடைபிடிக்க வேண்டும். அதுவரை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர்களை கொலம்பியா ஏற்றுக் கொள்ளாது,"என்று கூறியிருந்தார்.
இது குறித்து தமது ட்ரூத் சமூக ஊடகத்திக் கருத்துத் தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், "கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் முடிவு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தனாதாகும், அதனால்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது . இந்த நடவடிக்கைகள் ஆரம்பம் மட்டுமே. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த குற்றவாளிகளை திரும்பி அனுப்பப்படும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை கொலம்பியா மீறக்கூடாது,"என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் வந்த இரண்டு விமானங்களை கொலம்பியா இறங்க அனுமதித்தது. இது குறித்து பேசிய அமெரிக்காவின் செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லியாவிட், "கொலம்பியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்திய அமெரிக்க ராணுவ விமானத்தை தரையிறங்க அனுமதிப்பது உள்ளிட்ட அதிபர் டிரம்ப்பின் அனைத்து நிபந்தனைகளையும் கொலம்பியா ஏற்றுக் கொண்டுள்ளது," என்றார். இது குறித்து கொலம்பியா அரசு உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
லத்தீன் அமெரிக்காவில் கொலம்பியா பாரம்பரியமாக அமெரிக்காவின் முதன்மை நட்பு நாடாக இருந்தது. கொலம்பியா அதிபராக இடது சாரி சிந்தனை கொண்ட குஸ்டாவோ பெட்ரோ கடந்த 2022ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல் அமெரிக்காவுடனான உறவில் கொலம்பியா இடைவெளியை கடைபிடித்து வருகிறது . 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 475 கொலம்பிய நாட்டவர்களை கொலம்பியா ஏற்றுக் கொண்டிருக்கிறது.