புதுக்கோட்டை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், " பெரியாரைப் பார்த்துதான் பிரபாகரன் தனது படையில் பெண் புலிகளை சேர்த்தார் என்று கூறுவது பிரபாகரனை சிறுமைப்படுத்துவதாகும். பழ.நெடுமாறன் ஏன் அந்த கருத்தை இவ்வளவு காலம் கூறவில்லை.
நான் யாரைப் பார்த்தும் பதற்றப்படவில்லை. என்னை பார்த்துதான் பலர் பதற்றம் அடைந்துள்ளனர். உலகத் தமிழினம் என்னை மன்னிக்காது என்று கூறுகின்றனர். உங்களையே மன்னிக்கும் தமிழினம் என்னை மன்னிக்காதா?" என்று சீமான் கேள்வியெழுப்பினார்.
மேலும் பேசிய அவர், "நீங்கள் யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் என்னை வென்று பாருங்கள். திராவிடனுக்கு ஒரு தலைவர் தான். ஆனால் தமிழனுக்கு பல தலைவர்கள் பட்டியலில் உள்ளது.
வேங்கை வயல் வழக்கில் சிபிஐ விசாரணையில் எனக்கு நம்பிக்கை இல்லை. மற்றொரு புலனாய்வு இந்த வழக்கில் தேவைதான். அது சிறப்பு புலனாய்வு குழுவாக இருக்க வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டுமென்றால் எதற்காக மாநிலத்திற்கு சுயாட்சி கேட்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் பெரியார் மண்.. பெரியார் மண் என்று கூறுகின்றனர். ஆனால் பெரியாரே ஒரு மண்தான். பெரியார் விவகாரத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் என்னை எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன்.
பெரியார் எதிர்த்த பிராமணியத்தைச் சேர்ந்த பெண் முதல்வராக இருந்தபோது தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார் சட்டப் பாதுகாப்பை அவர்தான் கொடுத்தார். அருந்ததியர் ஒருவரை சபாநாயகர் ஆக்கியதும் அந்த பெண் தான்.
நான் தற்போது பெரியாரை பற்றி பேசுவது ஒரு புள்ளி தான். என்னைவிட அதிகம் பேசியவர்கள் தான் பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும்.
எதற்கெடுத்தாலும் பெரியார் மண் பெரியார் மண் என்று கூறுகின்றனர். இது தமிழ் மண். கனிம வள கொள்ளையை எதிர்த்து போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதான் சட்டம் ஒழுங்கு லட்சணமா, திராவிட மாடலா?
உண்மையையும் நேர்மையும் எடுத்து வைக்கும்போது இந்த சலசலப்பு ஏற்படத்தான் செய்யும். ஒரு மிகப்பெரிய தவறான கோட்பாட்டை தகர்த்தெறிந்து புதிய கோட்பாட்டை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு பல்வேறு இடையூறுகள் வரத்தான் செய்யும். அதற்காக அச்சப்படமாட்டேன்." என்று சீமான் கூறினார்.
அதைத்தொடர்ந்து, 'அடுத்த முறையும் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறார்களே?' என்ற கேள்விக்கு, "இதற்காக தான் நாங்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம். 2026 தேர்தலில் திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை ராஜா." என்று தமது பாணியில் சீமான்.
விஜயின் செயல்பாடு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு, "விஜயை தற்போது விட்டுவிடுவோம். தற்போது நாங்கள் பெருந்தலைகளுடன் மோதிக் கொண்டுள்ளோம். அவர் குறித்து இப்போது எதுவும் பேச வேண்டாம்." என்று சீமான் பதிலளித்தார்.